ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருந்தாளுனர் மர்ம சாவு


ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருந்தாளுனர் மர்ம சாவு
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருந்தாளுனர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் மைதிலி (வயது 24). இவரும் விக்கிரவாண்டி தாலுகா வெள்ளேரிப்பட்டை சேர்ந்த ஆதிகேசவன் (30) என்பவரும் காதலித்து கடந்த 30.10.2020 அன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு தியாஷ்சேஷன் என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது ஆதிகேசவன், அன்னியூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஒரு வருடமாக மருந்து வழங்குபவராக பணியாற்றி வருகிறார். மைதிலி, எண்ணாயிரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். இவர்கள் கடந்த 6 மாதங்களாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவன்- மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

போலீசார் விசாரணை

இந்த சூழலில் வெள்ளேரிப்பட்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி ஆதிகேசவன், தனது மனைவி மைதிலியை வெள்ளேரிப்பட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மைதிலி, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மைதிலியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை செல்வக்குமார், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story