மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டப்பணி 15 பேர் கொண்ட குழு ஆய்வு


மூக்கனூர் ஊராட்சியில்    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டப்பணி    15 பேர் கொண்ட குழு ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டப்பணியை 15 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உலகுடையாம்பட்டு மற்றும் சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கலெக்டருக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையிலும், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின்பேரிலும் உதவி திட்ட அலுவலர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ் ஆகியோர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட வீடுகள் தகுதிவாய்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? எனவும், தற்போது தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்களா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பயனாளிகளையும் அழைத்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி சங்கராபுரம் பா.ஜ.க.வினர் மூக்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story