தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

மதுரை மாநகராட்சி அரங்கில் நேற்று நடந்த விழாவில் தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 53 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதையும் தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரை மாநகராட்சி அரங்கில் நேற்று நடந்த விழாவில் தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 53 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதையும் தொடங்கி வைத்தார்.

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம்

தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 6-வது மண்டலம் திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன்மாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மை பணியாளர்களை கண்டறிந்து அங்கு இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழகத்தில் கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மதுரையில் தொடங்கிவைப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை, மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கிற்கு வந்தார். அங்கு நடந்த விழாவில், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்து, அத்திட்டத்துக்கான 'லோகோ'வை வெளியிட்டார். பின்னர் தூய்மை பணியாளர்களை கணக்கெடுக்கும் மொபைல் செயலியையும் அறிமுகம் செய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 53,301 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும்பொருட்டு, நிகழ்ச்சியில் 5 தூய்மை பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகியவற்றை வழங்கினார். இத்திட்டத்துக்கான கள ஆய்வு மற்றும் குறும்படங்களை பார்வையிட்டார். அவரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கவுன்சிலர்களுடன் சந்திப்பு

நிகழ்ச்சி நடந்த அரங்கில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார், அவரிடம் பலர் மனுக்களை அளித்தனர்.

பின்னர் அவர் கார் மூலம் விமானநிலையம் அருகே பெருங்குடி பகுதியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாநகராட்சி வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.பி. வெங்கடேசன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், தமிழரசி, வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா, அகமதாபாத் நகர்ப்புற மேலாண்மை மையத்தின் இயக்குனர் மன்விதா மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story