பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பயனாளிகளுடன் கலந்துரையாடல்
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
வேலூர்
பிரதமர் நரேந்திரமோடி ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் அடைந்த பயனாளிகளிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியும், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதியை மின்னணு மூலம் வழங்கும் நிகழ்ச்சியும் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசின் திட்டத்தின் மூலம் பயனடைந்த 96 விவசாயிகள் கலந்து கொள்ளும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி., அமலுவிஜயன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊராட்சி குழு தலைவர் பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், அமுதாஞானசேகரன், ரவிச்சந்திரன், திவ்யா, சத்தியானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக காலை 10 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயனாளிகள் வந்திருந்தனர். நிகழ்ச்சியானது இந்தி மொழியில் நடந்தது. இது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. இதனிடையே அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பல கோரிக்கைள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.