'இந்தியாவில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்'
இந்தியாவில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் என்று முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
பட்டிவீரன்பட்டியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பட்டிவீரன்பட்டி பா.ஜ.க. நகர துணைத்தலைவர் ஜெயமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச்செயலாளர் அன்புச்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடி ஆட்சியில் 8 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 45 கோடி பேருக்கு புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதி கட்டி தரும் திட்டம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவுடன் உள்ளது. பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கைக்கு எரிபொருள், மருந்து, உணவு என பல வகையில் இந்தியா உதவி வருகின்றது. ஏழை மக்களின் நிலை பொருளாதார நிலையை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மோடி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் என்றார். கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாவட்ட தலைவர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.