பாகன் தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு


தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலைக்கு வந்த பிரதமர் மோடி, ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார்.

நீலகிரி

கூடலூர்

முதுமலைக்கு வந்த பிரதமர் மோடி, ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார்.

முதுமலைக்கு மோடி வருகை

தமிழகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், அதன்பிறகு கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு மைசூருவில் இருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவினருடன் காரில் வந்தார். அப்போது காக்கி நிறத்தில் பேண்ட் மற்றும் சட்டை அணிந்தபடி ராணுவ வீரர் போன்று மிடுக்காக வந்திறங்கினார். அங்குள்ள வனத்துக்குள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வாகன சவாரி சென்று வனவிலங்குகளை கண்டு ரசித்தார்.

இதையடுத்து காலை 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா வழியாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு 10.30 மணிக்கு வந்தார். பிரதமர் மோடியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் முகாமில் நின்றிருந்த 22 வளர்ப்பு யானைகளும் துதிக்கையை உயர்த்தி பிளிறியவாறு பிரதமர் மோடியை வரவேற்றன. இதை அவர் வெகுவாக ரசித்தார்.

யானைகளுக்கு கரும்பு

பின்னர் வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் முறைகள், அவைகளுக்கு வழங்கக்கூடிய உணவுகள் குறித்து வன அதிகாரிகள் மற்றும் பாகன்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டியானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை பிரதமர் மோடி வழங்கி மகிழ்ந்தார்.

கரும்புகளை தின்ற வளர்ப்பு யானைகள் இனிப்பு சுவை உணர்ந்து அவரது கையை துதிக்கையால் வருடின. அப்போது பதிலுக்கு பிரதமர் மோடி தனது கையால் துதிக்கையை தட்டி கொடுத்தார்.

தொடர்ந்து முதுமலை முகாமை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டார்.

பின்னர் அந்த ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதியான பொம்மன்-பெள்ளியை சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது குட்டி யானைகளை பராமரித்தது குறித்து கேட்டார்.

பாகன் தம்பதிக்கு அழைப்பு

பிரதமர் மோடி கேட்டவற்றுக்கு பாகன் தம்பதி தமிழில் பதில் கூறினர். அதனை தமிழக வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, மொழி பரிமாற்றம் செய்து பிரதமர் மோடிக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து பொம்மன்-பெள்ளி 2 பேரும் டெல்லிக்கு கண்டிப்பாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

அதன் பின்னர் கூடலூர், மசினகுடி பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த டி-23 புலியை உயிருடன் பிடித்த வேட்டை தடுப்பு காவலர்கள் மாதன், பொம்மன், மீன் காலன் ஆகியோரை சந்தித்து தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பாராட்டி புகைப்படம் எடுத்து கொண்டார்.

தொடர்ந்து உன்னி செடிகளின் குச்சிகளால் ஆதிவாசி மக்கள் வடிவமைத்த யானைகளின் உருவங்கள் போன்ற கலைநயமிக்க பொருட்களை பார்வையிட்டார்.

பின்னர் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ், தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து 11.30 மணிக்கு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மசினகுடியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றார்.

சாலையில் இறங்கி நடந்த பிரதமர்

அங்கு செல்லும் வழியில் பொதுமக்களும், பா.ஜனதாவினரும் திரண்டு இருந்தனர். மேலும் தோடர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் இசை கருவிகளை இசைத்தபடி தங்களது பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடியை கண்டதும் பா.ஜனதாவினர் மற்றும் மசினகுடி பகுதி மக்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இதை கண்ட பிரதமர் மோடி தனது காரை நிறுத்தி விட்டு உடனடியாக சாலையில் இறங்கி நடந்தவாறு பொதுமக்களை பார்த்து வணங்கினார்.

இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி தனது இரு கைகளையும் உயர்த்தியபடி சைகை காண்பித்தார். உடனே பொதுமக்கள் முண்டியடித்தவாறு அவருக்கு கை கொடுக்க முயன்றனர். இதனால் அவரது பாதுகாப்பு படையினர் பொதுமக்களை தடுத்தவாறு முன்னேறி சென்றனர். தொடர்ந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தவாறு தனது காரில் ஏறி ஹெலிகாப்டர் தளத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.

மைசூரு புறப்பட்டார்

பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஹெலிகாப்டரில் மைசூருக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மசினகுடி-தெப்பக்காடு மாநில நெடுஞ்சாலையில் போடப்பட்டு இருந்த 5 அடுக்கு பாதுகாப்பு மதியம் 12 மணிக்கு விலக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

மிடுக்கான உடையில் கலக்கிய பிரதமர்

பிரதமர் மோடி உடை விஷயத்தில் தனி கவனம் செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளார். எந்த மாநிலத்துக்கு சென்றாலும், அந்த மாநிலத்துக்கு ஏற்ப உடை அணிவது அவரது சிறப்பு. சில சமயங்களில் மத, இன நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப ஆடை மற்றும் அணிகலன்களை அணிவது உண்டு.

பொதுவாக வட இந்திய உடைகளை விரும்பி அணியும் அவர், நேற்று நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்கு வந்தபோது, மிடுக்கான பிரத்யேக உடையுடன் காணப்பட்டார். நேற்று காலையில் மைசூருவில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், வனத்துறை ஊழியர்கள் அணியும் உடையை அணிந்து இருந்தார். காக்கி நிற பேண்ட்டும், கையில்லா சட்டையும் அணிந்து இருந்த அவர், கருப்பு நிற தொப்பி வைத்து இருந்தார். பொதுவாக பச்சை நிற இலைகளுடன் கூடிய ஆடைகளை ராணுவம் மற்றும் வனத்துறை ஊழியர்கள்தான் அணிவார்கள். இந்த உடை அலங்காரம் பிரதமர் மோடியை சற்று வித்தியாசப்படுத்தி காட்டியது. மேலும் அது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.


Related Tags :
Next Story