முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரியலூர் மாவட்டத்தில் செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஜெயங்கொண்டம் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 464 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த திட்டத்தை விரிவுபடுத்தி தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. இதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம், உணவு தயாரிப்பு முறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், உணவை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்குவது, தினசரி உணவு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உணவினை தயார் செய்தல், பள்ளி சூழலுக்கும், மதிய உணவு பணிக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் பணியை மேற்கொள்வது, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுவின் பணிகள், பள்ளி சமையல் அறைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவது குறித்து உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல், மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட விவரத்தினை முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.