பிரதமர் தெரிவித்த யோசனை: 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா? ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து
பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், சேலம் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சேலம்,
ஒரே போலீஸ் சீருடை
மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கி உள்ளது.
அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்து கொள்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால் சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
வேறுபாடு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், சேலம் பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சாத்தியம் இல்லை
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:-
மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.
நடைமுறைக்கு பொருந்தாது
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:-
ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைப்பிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.
இதேபோல மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.
மாற்றம் செய்யக்கூடாது
சேலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார்:-
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது தேவையில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி மொழி இருக்கிறது. ஏதாவது குற்ற வழக்குகளில் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது ஒரே போலீஸ் சீருடை இருந்தால் அது பல்வேறு குழப்பத்துக்கு வழிவகுக்கும். போலீஸ் துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு ஒரே சீருடை கொண்டு வந்தால் அது மாநிலத்தின் உரிமையை பறிக்கும் செயல். எனவே தமிழ்நாடு போலீஸ் சீருடையை மாற்றம் செய்யக்கூடாது.
மாநிலங்களின் அடையாளம்
ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சு பணியாளர் மகாதேவன்:-
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக போலீஸ் சீருடை இருப்பது அந்தந்த மாநிலங்களின் அடையாளம் ஆகும். அதை மாற்றக்கூடாது. சீருடையை மாற்றினால் போதுமா? மொழி பிரச்சினை இருக்கிறது. தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு அங்கு சென்றுவிடுகிறார்கள். அவர்களை தேடி வட மாநிலங்களுக்கு சென்றால் அங்குள்ள உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்பு தேவை. குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஒரே சீருடை குழப்பமாக இருக்கும். தமிழ்நாடு போலீஸ்காரர் யார்? வட மாநில போலீஸ்காரர் யார்? என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்படும். எனவே ஒரே போலீஸ் சீருடை என்பது நடைமுறைக்கு பொருந்தாது என்பது எனது கருத்தாகும்.
வரவேற்கத்தக்கது
தளவாய்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை:-
ஒரேநாடு ஒரே போலீஸ் சீருடை வரவேற்கத்தக்கது. ஏனென்றால் இந்தியா என்பது ஒரு நாடு. அதில் பல்வேறு மாநிலங்கள் இருக்கலாம். ஆனால் ஒரே சீருடை கொடுத்தாலும் அந்த சீருடையில் அந்தந்த மாநிலங்களை குறிக்கும் வகையில் எழுத்துக்கள் இடம்பெறும். குற்றசெயல்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கும் பயம் ஏற்படும். காக்கி சீருடையை காவலர்கள் மட்டும் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தால் நல்லதாக இருக்கும். அதை மத்திய அரசு பரிசீலனை செய்யலாம்.
தனித்துவம் இழக்கிறது
சேலத்தை சேர்ந்த வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை:-
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி அடையாளம் உண்டு. ஆனால் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால் மாநில அரசின் தனித்துவம் இழக்கிறது. அதாவது மொழி, கலாசாரம், பண்பாடு போன்றவை மாறுபடுவதுண்டு. அது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் கூறுகிறது. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு போன்ற வரிசையில் அதன் வெளிப்பாடாக ஒரே போலீஸ் சீருடையை மத்திய அரசு கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மாநில அரசியலமைப்பு உரிமையை இழக்க நேரிடும். போலீஸ் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தந்த மாநிலத்தின் தனித்தன்மைக்கு ஏற்ப மாநில அரசுகள் போலீஸ் சீருடையை வடிவமைத்து உள்ளன. அதை மத்திய அரசு மாற்றக்கூடாது. சீருடையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு பதிலாக போலீசாருக்கான நலத்திட்டங்களில் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம்.
இது தேவையா?
தேவூர் அரசிராமணியை சேர்ந்த இல்லத்தரசி கலைவாணி:-
நாடு முழுவதும் காவல்துறையில் ஒரே சீருடை அமல்படுத்துவது என்பது மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் செயல். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அடையாளங்கள் உள்ளன. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப போலீசாரின் சீருடை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இது தேவையா?. அதற்கு பதில் காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஒரே சீருடை என்பது தேவை இல்லாதது. அதனால் எந்தவித பலனும் ஏற்படப்போவது இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.