'நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கும் திட்டமிடுதல் குறித்து அரசு ஆராயும்' முதல்-அமைச்சர் பேச்சு


நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கும் திட்டமிடுதல் குறித்து அரசு ஆராயும் முதல்-அமைச்சர் பேச்சு
x

நோய்கள் புதுப்புது அவதாரம் எடுப்பதால், நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கும் திட்டமிடுதல் குறித்து அரசு ஆராயும் என்று சுகாதார மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சென்னையில் நேற்று சுகாதார மாநாடு-2022 நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:-

கல்வியும்-மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகத்தான துறையாக இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. உங்களது பணிகளை மேலும் செம்மைப்படுத்தி, மக்களுக்கு உதவத் திட்டமிடும் நோக்கத்தோடு இந்த மாநாட்டை நீங்கள் இங்கே கூட்டியிருக்கிறீர்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளைச் சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருப்பதை அறிந்து உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசின் குறிக்கோள்

இந்த அரசினுடைய நோக்கத்தை முழுமைப்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஊரகப்பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை, எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாகவும், உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள்.ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் என்பதற்காகத்தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடி நபர்கள் என்ற எண்ணிக்கையை அடைய இருக்கிறது.

17.16 லட்சம் பேர் பரிசோதனை

சாலை விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்பைக் குறைப்பதற்கும், பொன்னான நேரம் என்று சொல்லப்படும் முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ரூ.1 லட்சம் வரை இலவசமாக வழங்கப்படும் 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டம் 18-12-2021 முதல் செயல்படுத்தப்படுகிறது.

நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகைசெய்யக்கூடிய வகையிலே 'கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்' மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 17 லட்சத்து 16 ஆயிரம் நபர்கள் பரிசோதனை செய்திருக்கிறார்கள்.

உடனடி நடவடிக்கை

நான் பெருமையோடு சொல்கிறேன், இந்த 3 திட்டங்களும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி தணிக்கை செய்து, அங்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதா? மருத்துவமனைகளுக்கு என்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து, குறைகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு-சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் மிக உயர்ந்த குறியீடுகளை அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். மருத்துவ வளர்ச்சி அனைத்திலும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல் வேண்டும்.

நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்க...

சுகாதாரக் குறியீடுகளை வைத்து மருத்துவமனைகளை தரவரிசைப் படுத்துகிறார்கள். இந்த தரவரிசையில் பின்னடைந்துள்ள மருத்துவமனைகளை முன்னே கொண்டுவர வேண்டும். மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீர்செய்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை, மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும். சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும்.

நோய்கள் புதுப்புது அவதாரம் எடுத்து வருகின்றன. அவற்றை வெல்லும் முறைகளும் பன்முனை கொண்டதாக மாற வேண்டும். பொதுவாகவே நோய் எதிர்ப்புச்சக்திக்குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர்களும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படியானால் நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்குவதற்கு அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலைச் செய்யலாம் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

திருப்புமுனையாக அமையும்

நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை. அதனைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவை குறித்தும் நாம் ஆராய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அந்த வகையில் இந்த மாநாடு, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும்; அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஆர்.லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் சு.கணேஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story