முதுமக்கள் தாழியில் ஆதிகால மனிதன் எலும்புகள் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழியில் இருந்து ஆதிகால மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழியில் இருந்து ஆதிகால மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அகழாய்வு பணி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு, மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த அகழாய்வு பணியில் தங்க காதணி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதிகால மனிதன் எலும்புகள்
இந்த நிலையில் நேற்று ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3,200 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகளில் இருந்து ஆதிகால மனிதனின் அனைத்து எலும்புகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகளில் ஆதிகால மனிதனின் தலை, தாடை எழும்பு, பல், கை, கால், முதுகு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் மத்திய தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
பகுப்பாய்வு
மேலும், தற்போது கிடைத்துள்ள பற்கள் டி.என்.ஏ. பகுப்பாய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தெரிவித்தார்.