இயல்பு நிலைக்கு திரும்பிய 'மலைகளின் இளவரசி'
கொடைக்கானலில் இயல்பு நிலை திரும்பியது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலை, கடந்த சில தினங்களாக அடர்ந்த பனிமூட்டம் ஆக்கிரமித்து இருந்தது. இதேபோல் மிதமான மற்றும் பலத்த மழையும் அவ்வப்போது பெய்தது. இதுமட்டுமின்றி கடும் குளிர் வாட்டியது. இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. அடர்ந்த பனிமூட்டம் விலகியது. அதிகாலை முதலே வானம் நீலநிறத்தில் காட்சியளித்து பகலவன் பவனி வந்த காட்சியை பார்க்க முடிந்தது. காலை முதல் மாலை வரை வெப்பமான வானிலை நிலவியது.
கொடைக்கானல் கோக்கர்ஸ் வால்க் பகுதியில் உள்ள முகடுகளை முத்தமிட்டபடி வெண்மேக கூட்டங்கள் தரையிறங்கியது. கடலில் நுரை பொங்கி வரும் அலையைபோல, சாரை சாரையாக மேக கூட்டங்கள் தவழ்ந்து சென்ற ரம்மியமான காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது.
எழில்கொஞ்சும் இந்த காட்சியை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பகலில் வெப்பம் நிலவியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.