இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்


இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சட்டபேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சட்டபேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

தமிழக சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, தொழில்துறை, வேளாண்மை துறை, கனிம வளங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக ஓசூரில் முதல் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் டைட்டன் தொழிற்சாலையில், செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள அதிகாரிகளுடன் நிர்வாக செயல்பாடுகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து தொழிற்சாலைக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது, கை ெகடிகாரம் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர்? என்பது குறித்தும், தொழிலாளர்களின் பணி குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.

பின்னர் செல்வப்பெருந்தகை, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டம் இயற்ற உள்ளோம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பல்வேறு துறைகளில் கள ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். இதில் அதிகாரிகளிடம் விசாரணை செய்து அவர்கள் செய்த முறைகேடுகள் மற்றும் தவறுகள் குறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். வேலை வாய்ப்பு சட்டத்தின்படி, ஒரு தொழிற்சாலையில் 80 சதவீதம் நிரந்தர பணியாளர்களுக்கும், 20 சதவீதம் தற்காலிக பணியாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை புறக்கணிப்பு என்பது கடந்த காலங்களில் இருந்தது. தற்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தொழில் அதிபர்களிடம் பேசி வருகிறார். தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் விரைவில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற உள்ளோம்.

முன்னுரிமை

தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்குவதும், தொழில் துறையை வளர்ப்பதுமே தமிழக அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்காக நாம் இங்கு தொழிற்சாலைகளை உருவாக்கி வைக்கவில்லை, மாறாக தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story