வசிக்க இடம் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை
வசிக்க இடம் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் உதவி கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை:
வசிக்க இடம் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் உதவி கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் கூட்டம்
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் உதவி கலெக்டர் அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பகாத்முகமது, மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ல் பிரிவு 40-ல் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரும் வண்ணம் அணுகுதல் வசதியை ஏற்படுத்த கூறப்பட்டுள்ளது. மேலும் அரசாணை எண் 21-ல் எவ்வாறு அணுகுதல் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மக்கள் அத்தியவசிய தேவைகளுக்கு பயன்படும் உணவகங்கள், வங்கிகள், ஷாப்பிங் மால், ஜவுளி கடைகள் போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் சாய்வுதளம், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பல மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைமுறைபடுத்தாதவர்களின் கட்டிட உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுற்றறிக்கையை அனைவருக்கும் அனுப்ப வேண்டும்.
வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை
சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தாமதமின்றி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அரசால் கட்டப்படும் வாடகை கடைகளில் சலுகையுடன் கூடிய முன்னுரிமை அளிக்க வேண்டும். வசிக்க இடம் இல்லாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசின் வீடு வழங்கும் திட்டத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வாகன நிறுத்துமிடம்
முன்னாள் சார் ஆட்சியர் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனத்தை நிறுத்த தனியாக எங்களுக்கு இடம் ஒதுக்கி தந்தார். தற்போது அந்த இடம் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதை எங்களுக்கு பெற்றுத் தந்து மாற்றுத்திறனாளிகளின் வாகனம் தவிர்த்து பிற வாகனம் நிறுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.