சிறப்பு முகாம் சிறை சுவற்றில் ஏறி கைதிகள் போராட்டம்


சிறப்பு முகாம் சிறை சுவற்றில் ஏறி கைதிகள் போராட்டம்
x

திருச்சியில் சிறப்பு முகாம் சிறை சுவற்றில் ஏறி கைதிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு கைதிகள் 156 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு முகாம் சிறையில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மறுநாள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திருச்சி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி கைதிகளிடமிருந்து 155 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் வெளியில் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவதையும் தடை செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முகாமில் கைதிகள் செல்போனை திரும்ப தரக்கோரி மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.

சுவற்றில் ஏறி போராட்டம்

இதன் காரணமாக முகாம் கைதிகளை பார்க்க வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று காலையில் முகாம் கைதிகளை பார்ப்பதற்காக, அவர்களது உறவினர்கள் வந்து இருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சிறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை சிறை போலீசார் கலைந்து போக செய்தனர்.

இதனிடையே முகாமில் உள்ள கைதிகள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முகாம் சிறையின் சுற்றுச்சுவரில் ஏறி கோஷமிட்டனர். தங்களை பார்க்க வரும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தால் முகாம் சிறையில் நேற்றும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story