விருதுநகர் சிறையில் கைதிகள் திடீர் ரகளை: போலீஸ் வேன் கண்ணாடி உடைப்பு
விருதுநகர் சிறையில் கைதிகள் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். எனவே அதிரடியாக 25 பேர் வேறு சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கச்சேரி ரோட்டில், மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் 10 அறைகள் உள்ளன. இங்கு பெண்கள் உள்பட 255 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.
ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் இந்த சிறையில், 1 மற்றும் 2-வது அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு கொலை மிரட்டல் இருந்ததாகவும், எனவே சிறையில் இவர்களை குளிக்கவும், உணவு உண்ணவும், அழைத்து செல்லும்போது மற்ற அறைகளில் உள்ள கைதிகளை அனுமதிப்பதில்லை என்றும், இதனால் மற்ற அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறை நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் கூறி வந்தனர்.
ரகளை
இந்த நிலையில், 5-வது அறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர், மேற்கண்ட 12 கைதிகளில் ஒருவரிடம் பிளேடு இருப்பதாக கூறிய நிலையில் அவர்களது அறையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பிளேடு எதுவும் சிக்கவில்லை.
இதற்கிடையே பிளேடு இருப்பதாக கூறிய கைதி, 5-வது அறையில் இருந்து 3-வது அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திடீர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த ரகளையின் போது அசாம் மாநில கைதி ஒருவரும், சரவணக்குமார் என்ற கைதியும் காயம் அடைந்தனர்.
கைதிகள் இடமாற்றம்
பின்னர், அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரகளை நடந்ததால், வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட சிறைக்கு விரைந்து வந்து ரகளை செய்த கைதிகளை சமரசப்படுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து சிறை அதிகாரி ரமா பிரபா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய உயர் அதிகாரிகள் 23 கைதிகளை மதுரை மத்திய சிறைக்கும், 2 கைதிகளை திருச்சிக்கும் இடமாற்றம் செய்ய முடிவெடுத்தனர்.
கண்ணாடி உடைப்பு
இதனைத்தொடர்ந்து கைதிகளை இடமாற்றம் செய்ய போலீஸ்வேன் வரவழைக்கப்பட்டது. முதலில் 13 கைதிகள் மதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இவர்களில் 4 பேர் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில் ஒருவர் தலையால் முட்டி, போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை சமரசப்படுத்தி, மதுரைக்கு 13 பேரையும் அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து 10 பேரை மதுரைக்கும், 2 பேரை திருச்சிக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.