தனியார் பஸ் உரிமையாளர் கடத்தப்பட்டாரா?


தனியார் பஸ் உரிமையாளர் கடத்தப்பட்டாரா?
x

தனியார் பஸ் உரிமையாளர் கடத்தப்பட்டாரா?

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே உள்ள வழுத்தூரை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ஊட்டியில் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் பஸ் உரிமையாளர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள வழுத்தூர் புது தெருவை சேர்ந்தவர் மர்ஜிக் அலி. இவர் பஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா காலத்திற்கு பிறகு இந்த நிறுவனம் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டதாக தெரிய வருகிறது. இதையடுத்து முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் முதலீட்டை திரும்ப தருமாறு மர்ஜிக் அலியை கேட்டுள்ளனர். நெருக்கடி முற்றிய நிலையில் மர்ஜிக் அலி திடீரென தலைமறைவானார்.

மர்ம நபர்கள் கடத்தியதாக புகார்

இந்த நிலையில் ஊட்டியில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த மர்ஜிக் அலியை கடந்த 16-ந் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக அவரது மனைவி ஹவ்வா பீவி ஊட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ஊட்டி போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்ம நபர்கள், மர்ஜிக் அலியை வழுத்தூர் ஜமாத் சபை நிர்வாகிகள் சிலரிடம் ஒப்படைத்து சென்றதாக கூறப்படுகிறது.

முதலீட்டாளர்கள் குவிந்தனர்

மர்ஜிக் அலி சொந்த ஊருக்கு வந்துள்ள தகவல் அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவியது. வழுத்தூர் புது தெருவில் உள்ள மர்ஜிக் அலி வீட்டு முன்பு முதலீட்டாளர்கள் பலரும் குவிந்தனர். இதையடுத்து ஜமாத் சபை நிர்வாகிகள் அய்யம்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, கலைவாணி, அனிதா கிரேசி மற்றும் போலீசார் விரைந்து வந்து திரண்டிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஊட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நள்ளிரவு வரை மர்ஜிக் அலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஊட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வழுத்தூருக்கு விரைந்து வந்து மர்ஜிக் அலியை விசாரணைக்காக ஊட்டிக்கு அழைத்து சென்றனர்.

மர்ஜிக் அலி கடத்தப்பட்டாரா? எதற்காக கடத்தப்பட்டார்? அவரை அழைத்து வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story