தனியார் நிறுவன டிரைவர் மர்ம சாவு


தனியார் நிறுவன டிரைவர் மர்ம சாவு
x

தனியார் நிறுவன டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

தனியார் நிறுவன டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர்

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள பெரிய கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ரஞ்சித் (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். வழக்கமாக காலை 8 மணிக்கு வேலைக்குச் செல்லும் அவர், இரவு 8 மணிக்கு வீடு திரும்பி விடுவார். கடந்த சனிக்கிழமை வேலைக்கு சென்ற அவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து பெற்றோர் ரஞ்சித்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் வேலை செய்து வந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் மாத சம்பளத்தை ரஞ்சித் பெற்றுக் கொண்டு இரவு 8 மணிக்கே வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மர்மசாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந் நிலையில் நேற்று திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகேயுள்ள இரட்டை மலை செல்லும் வழியில் உள்ள கொத்தமங்கலம் மயானத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர்.

இதில், இறந்து கிடந்தது ரஞ்சித் என்பது தெரிய வந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்ததுடன் முகத்தில், மரத்தை பாலீஷ் செய்ய பயன்படுத்தும் வார்னீஷ் திரவம் ஊற்றப்பட்டு இருந்தது. மேலும் உடலுக்கு அருகில் மது பாட்டிலும், பூச்சுக்கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்தன. ஆனால், அவரது சட்டைப்பையில் சம்பளப் பணத்தை காணவில்லை.

பிரேத பரிசோதனை

எனவே மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்துவிட்டு, சம்பளப் பணத்தை திருடிச்சென்றிருக்கலாமா? என்றும், போலீசாரை திசை திருப்பும் நோக்கில் மது பாட்டில் மற்றும் பூச்சி கொல்லி மருந்து பாட்டில்களை அங்கு போட்டு சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே ரஞ்சித் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு முடிவு தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story