தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை-4 பேருக்கு வலைவீச்சு
சேலம் அருகே மோட்டார் வாகன விபத்து தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அயோத்தியாப்பட்டணம்:
விற்பனை பிரதிநிதி
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாத வாலிபரான இவர் நேற்று காலை வாழப்பாடி அருகே பேளூரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் ஆர்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த சக்திவேல் (40), அவருடைய நண்பர் சரவணன் (42) ஆகியோர் மேட்டுப்பட்டியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் மார்க்கெட்டுக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். ெமாபட்டை சக்திவேல் ஓட்டி வந்தார்.
காலை 10 மணியளவில் ராமர் கோவில் அருகே மொபட் வந்த போது, கோபிநாத்தின் மோட்டார் சைக்கிளும் எதிரே வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேரின் வாகனங்களும் சேதம் அடைந்தன.
அடித்துக்கொலை
இதையடுத்து மொபட்டை பழுது பார்ப்பதற்காக கோபிநாத்திடம், சரவணனும், சக்திவேலும் பணம் கேட்டனர். இதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் சக்திவேல் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்களான தேவ், சந்தோஷ் ஆகியோரும் அங்கு வந்தனர். பின்னர் சக்திவேல் உள்பட 4 பேரும் சேர்ந்து கோபிநாத்தை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சக்திவேல், சரவணன் உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கோபிநாத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இந்த கொலை தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், சரவணன், தேவ், சந்தோஷ்குமார் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கோபிநாத் கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.