மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை- குழந்தையின் பிறந்தநாளில் சோகம்
சேலத்தில் மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் தனியார் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன மேலாளர்
சேலம் அழகாபுரம் ஜவகர் தெருவை சேர்ந்தவர் தருண் (வயது 29). இவர், பிருந்தாவன் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மைதிலி (24). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஷால் என்ற ஒரு வயதில் மகன் உள்ளான்.
நேற்று முன்தினம் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து தருண் மது அருந்தியுள்ளார். மேலும் அவர் வீட்டிற்கு மதுபாட்டிலை வாங்கி வந்து மீண்டும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி மைதிலி, கணவரை கண்டித்துள்ளார். வெளியே மது அருந்திவிட்டு வந்த பிறகு வீட்டிலும் மது அருந்தலாமா? என கண்டித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தற்கொலை
தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் மைதிலி எழுந்து பார்த்தபோது, குழந்தை தொட்டில் கட்டும் வேட்டியில் கணவர் தருண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன தருணின் சொந்த ஊர் சின்னசேலம் ஆகும். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தருணின் உடலை பார்த்து கதறி அழுதனர். குழந்தையின் பிறந்தநாள் விழாவில் நண்பர்களுடன் மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அழகாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.