தூக்க மாத்திரைகளை தின்று தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை
ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால் தூக்க மாத்திரைகளை தின்று தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால் தூக்க மாத்திரைகளை தின்று தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன மேலாளர்
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 40). இவருக்கு திருமணமாகி, ஒரு மகளும், மகனும் உள்ளனர். கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதனால், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கேயே வசித்தும் வந்தார்.
இதற்கிடையே, அவருக்கு ஷேர் மார்க்கெட் (பங்குச் சந்தை) பற்றி தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு ஓரளவு லாபம் கிடைத்தது. இதையடுத்து ஜெகதீஷ் அக்கம்பக்கத்தில் உள்ள சிலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தையும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல அவருக்கு அதில் எந்த லாபமும் கிடைக்காமல், அவர் போட்ட முதலீடுகளை இழந்ததாக தெரிகிறது.
கடன் தொல்லை
இதற்கிடையே, கடனை கொடுத்தவர்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால், அவர் வெளியூரில் உள்ள வீடு மற்றும் சொத்துக்களை விற்று பாதி கடனை அடைத்துள்ளார். இருப்பினும் கடன் தொல்லை தாங்க முடியாமல், மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியில் உள்ள அவரது தந்தை ஜெகநாதன் வீட்டிற்கு குடியேறினார்.
இந்தநிலையில், கடன் கொடுத்தவர்கள் அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட ஜெகதீஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்க மாத்திரைகளை தின்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.