கைதியை பிடிக்க தனிப்படை திண்டுக்கல் விரைவு
கைதியை பிடிக்க தனிப்படை திண்டுக்கல் விரைவு
கோவை
கோவையில் பஸ்சில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை திண்டுக்கல் விரைந்து உள்ளது.
பஸ்சில் அழைத்து வந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தாலிப் ராஜா (வயது 29). இவர் மீது திருப்பூர் வடக்கு, நல்லூர் போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு தொடர்பான வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு திருப்பூரில் உள்ள கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே கோர்ட்டில் ஆஜர்படுத்த கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாலிப் ராஜாவை திருப்பூரை சேர்ந்த ஆயுதப்படை போலீசார் அழைத்துச்சென்றுவிட்டு, மாலையில் கோவை திரும்பினார்கள்.
கைதி தப்பி ஓட்டம்
அவர்கள் வந்த பஸ் கோவை, ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது பஸ்சுக்குள் இருந்த தாலிப் ராஜா, திடீரென்று போலீசாரின் பிடியில் இருந்து தப்பி, பஸ்சை விட்டு கீழே குதித்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடினாா. இதை பார்த்ததும் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் சத்தம் போட்டபடி தாலிப்ராஜாவை துரத்திச்சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடி மறைந்துவிட்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் தாலிப் ராஜாவை அழைத்து வந்த ஆயுதப்படையை சேர்ந்த 5 போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் விரைவு
அத்துடன் அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இருந்தபோதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தப்பி ஓடிய தாலிப் ராஜாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்பதால், அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பு உள்ளன.எனவே தனிப்படையை சேர்ந்த போலீசார் திண்டுக்கல் விரைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் வேடசந்தூர் சென்றனர்.
தீவிர விசாரணை
தொடர்ந்து தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் தாலிப் ராஜாவின் உறவினர்களின் செல்போன் எண்களை பெற்று, அவர்களுக்கு யாரெல்லாம் போன் செய்கிறார்கள் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் போலீசார் வேடசந்தூரில் முகாமிட்டு, தாலிப் ராஜாவின் உறவினர் வீட்டுக்கு வரும் நபர்கள் குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.