தனியார் சாய தொழிற்சாலைக்கு 'சீல்'
தனியார் சாய தொழிற்சாலைக்கு ‘சீல்’
பழனி அருகே சாமிநாதபுரத்தில் அமராவதி ஆற்றங்கரை அருகே தனியார் சாய தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் சாய கழிவுகள் அமராவதி ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வந்துள்ளது. இதையடுத்து ஆற்றில் கழிவுகளை கலக்கும் தனியார் சாய தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர். அப்போது தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அமராவதி ஆற்றில் கலப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் முன்னிலையில் நேற்று அந்த தனியார் சாய தொழிற்சாலையை பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.