சேலத்தில் 26-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றன.
சேலம்
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பேசியதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் தமிழக அரசால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்டங்களின் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகின்றன.
26-ந் தேதி நடக்கிறது
அதன்படி, சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 26-ந் தேதி ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்குப் பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
அடிப்படை வசதிகள்
இம்முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்கள் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வருகைதரும் வேலைநாடுநர்களுக்கு தேவையான பஸ் வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஆ.லதா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மணி உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.