சம்பளம் வழங்காததை கண்டித்து தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தேவர் சோலையில் சம்பளம் வழங்க கோரி தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்
தேவர் சோலையில் சம்பளம் வழங்க கோரி தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம் வழங்கவில்லை
கூடலூர் தாலுகா தேவர்சோலையில் தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளம் வழங்கப்பட வில்லை. இதனால் சம்பளம் வழங்கக்கோரி தோட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். இருப்பினும் வழங்க வில்லை. இதை கண்டித்து கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் சம்பளம் வழங்காத பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடத்தியதின் விளைவாகவும், கடந்த நவம்பர் மாதம் குன்னூரில் உள்ள தொழிலாளர் ஆணையர் தலைமையில் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பளம் வழங்கப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளம் இதுவரை வழங்காததால் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் தோட்ட நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தொழிலாளர்களுடன் தோட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
தொடர்ந்து சிறிய தொகையை தொழிலாளர்களின் வங்கி கணக்கு மூலமாக தோட்ட நிர்வாகம் வழங்கியது. ஆனால் நிலுவை சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்துவதாக நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்க வில்லை. இதனால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிர படுத்த போவதாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எஸ்டேட் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் உணவு சமைத்து சாப்பிட்டனர்.