தனியார் தொழிற்சாலை பஸ் கவிழ்ந்து விபத்து-23 தொழிலாளர்கள் காயம்


தனியார் தொழிற்சாலை பஸ் கவிழ்ந்து விபத்து-23 தொழிலாளர்கள் காயம்
x

செய்யாறு அருகே தனியார் தொழிற்சாலை பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 23 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே தனியார் தொழிற்சாலை பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 23 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

தனியார் தொழிற்சாலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று அதிகாலை ஒரு தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ், செய்யாறு மற்றும் ஆற்காடு தாலுகா பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம்-ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கொடையம்பாக்கம் கிராமம் அருகே சாலையின் வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர வயல்வெளி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

23 பேர் காயம்

அதில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 23 பேர் காயம் அடைந்து கூச்சல் எழுப்பினர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் காயம் அடைந்த தொழிலாளர்கள் ஏற்றப்பட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் லேசான காயமடைந்த 18 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த ஆயிரம்மங்கலம், பெருங்கட்டூர், கொடையம்பாக்கம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 5 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து மோரணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story