தனியார் நிதி நிறுவன ஊழியர் விபத்தில் பலி
திருமணமான 4 மாதத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் விபத்தில் பலியானாா்.
சின்னசேலம்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆவணவாடி கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் குமரேசன்(வயது 32). இவர், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். இவருக்கும், சின்னசேலம் அருகே உள்ள வி.பி.அகரம் கிராமத்தை சேர்ந்தவரும், மேல்நாரியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் அருணா(26) என்பவருக்கும் 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள், சின்னசேலம் மூங்கில்பாடிசாலையில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்ற குமரேசன் மாலை 3 மணிக்கு தலைவாசலில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தென்பொன்பரப்பி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை பூண்டி கிராம எல்லையில் சென்றபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் குமரேசன் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.