வயிற்றில் டியூப்பை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள்


வயிற்றில் டியூப்பை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள்
x

பெரம்பலூரில் பெண் போலீசுக்கு அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் டியூப்பை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

தாங்க முடியாத வயிற்று வலி

பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மனைவி திலகவதி. இவர்கள் 2 பேரும் போலீசாக பணிபுரிந்து வருகின்றனர். திலகவதி கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்த போது தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது, அவருக்கு குடல் சுழற்சி ஏற்பட்டிருப்பதாகவும், அதனை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

அறுவை சிகிச்சை

அதனை தொடர்ந்து அதே ஆண்டு மே 6-ந்தேதி திலகவதிக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு டாக்டர்கள் அருள்செல்வனிடம் திலகவதியின் வயிற்றின் வலது ஓரத்தில் சினை முட்டை ஒன்று உடைந்து இருந்தது என்றும், அதனை சுத்தம் செய்ததாகவும் கூறி மருந்துகள் கொடுத்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். திலகவதி அந்த மருந்துகளை சாப்பிடும் வரை வயிற்றில் வலி இல்லாமல் இருந்ததாகவும், அதன் பிறகு அவருக்கு மீண்டும் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறு டாக்டர்களிடம் திலகவதி சிகிச்சை பெற்றார்.

வயிற்றில் டியூப்பை வைத்து...

இறுதியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திலகவதிக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவருடைய வயிற்றில் ஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சையின் போது கழிவுநீர் அகற்ற வைக்கப்படும் வடிகால் டியூப் வயிற்றின் உள்ளே வைத்து தைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திலகவதி உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம், அவருடைய வயிற்றில் இருந்த வடிகால் டியூப்பை டாக்டர்கள் அகற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட திலகவதி தனியார் மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால் தனக்கு ஏற்பட்ட இன்னலுக்கும், கால, பண விரயத்திற்கும், மன உளைச்சலுக்கும் இழப்பீடு வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

வழக்கை விசாரித்த வந்த நுகர்வோர் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான ஜவகர், உறுப்பினர்கள் திலகவதி, முத்துக்குமரன் நேற்று தீர்ப்பு வழங்கினர். சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட திலகவதிக்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இழப்பீடாக ரூ.5 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.


Next Story