தனியார் மருத்துவமனை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் மருத்துவமனை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2022 10:05 PM IST (Updated: 17 Dec 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் காதல் கணவர் இறந்த ஒருமாதத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்


வேலூரில் காதல் கணவர் இறந்த ஒருமாதத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதல் திருமணம்

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி ஷர்மிளா (வயது 30) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

கார்த்திக் கடந்த மாதம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதனால் ஷர்மிளா மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். கணவர் இறந்து விட்டதால் அவர் அலமேலுமங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

காதல் திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் ஷர்மிளா மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி அடிக்கடி தனிமையில் அழுததாகவும், அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி தேற்றியதாகவும் கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது ஷர்மிளா மின்விசிறியில் தூக்கில் தூங்கினார்.

சிறிதுநேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு வந்த அவரின் பெற்றோர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஷர்மிளாவின் தந்தை சவுந்தரராஜன் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் கணவர் இறந்த ஒருமாதத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும், 1½ வயது பெண்குழந்தை பெற்றோர் இழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story