நகை அடகு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
வேலூரில் நகை அடகு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் நகை அடகு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 29). இவர் வீட்டையொட்டி நடை அடகு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 26-ந் தேதி மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் 2 மர்மநபர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில், ஜன்னல் கண்ணாடி லேசாக சேதமடைந்தது.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், முகேஷ்குமாரிடம் அடிக்கடி நகை அடகு வைத்து பணம் பெற்று சென்ற 3 பேர் செல்போனில் ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர். 10 நாட்களுக்குள் பணம் கொடுக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் மிரட்டி உள்ளனர். ஆனால் முகேஷ்குமார் ரூ.10 லட்சம் கொடுக்க மறுத்துள்ளார். அதன்காரணமாக 2 மர்மநபர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறிதுநேரத்தில் முகேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நாங்கள் கேட்ட ரூ.10 லட்சத்தை கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதன்பின்னரும் ஓரிரு நாட்களில் பணம் கொடுக்காவிட்டால் உன்னையும், உன் குடும்பத்தையும் சும்மா விட மாட்டோம் என்று மிரட்டியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தனிப்படை அமைப்பு
இந்த நிலையில் முகேஷ்குமாரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் மற்றும் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தனிப்படை போலீசார் முகேஷ்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்தும், அவர்கள் பேசிய செல்போன் எண்களையும் கேட்டறிந்தனர். பின்னர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேரின் உருவங்களை கண்காணிப்பு கேமராக்களில் பார்வையிட்டு, அவர்கள் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.