ஆலங்குளத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்; கலெக்டர் ஆகாஷ் தகவல்
ஆலங்குளத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.