தனிப்படை போலீசார் தீவிர வேட்டை:ஈரோடு ஆசிரியை கொலையில் முக்கிய தடயம் சிக்கியது
ஈரோடு ஆசிரியை கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது.
ஈரோடு ஆசிரியை கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது.
ஆசிரியை கொலை
ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி.வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 62). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (54). இவர் ஈரோடு வைராபாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 20-ந் தேதி காலை ஆசிரியை புவனேஸ்வரி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை யாரோ கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்கச்சங்கிலியை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனிப்படை
இந்த கொலை தொடர்பாக துப்பு துலங்காத நிலையில் கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆசிரியை வீடு புகுந்து கொலை செய்து சென்ற மர்ம நபரை கண்டுபிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகர் தனிப்படை அமைத்து உள்ளார். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஈரோட்டுக்கு நேரில் வந்து கொலை நடந்த வீட்டை பார்வையிட்டார். மேலும், கொலை செய்யப்பட்ட ஆசிரியை புவனேஸ்வரியின் கணவர் மனோகரன் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினார். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று அவர் உறுதி அளித்தார்.
முக்கிய தடயம்
இதையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் நேற்றும் தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். அதில் முக்கிய தடயம் சிக்கியது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று தடயம் தொடர்பான சோதனையை மேற்கொண்டனர். கொலை நடந்து 3 நாட்களுக்கும் மேலாக எந்த துப்பும் துலங்காத நிலையில் நேற்று கிடைத்து உள்ள முக்கிய தடயத்தினால் போலீசார் கொலையாளியை நெருங்கி உள்ளனர். இதனால் விரைவில் ஆசிரியையை கொன்ற கொலையாளி சிக்குவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.