ராணுவ வீரரை தேடும் தனிப்படை போலீசார்
மார்த்தாண்டம் அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைப்பு வழக்கு தொடர்பாக ராணுவ வீரரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைப்பு வழக்கு தொடர்பாக ராணுவ வீரரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி உயர சிலை அமைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 8-ந்தேதி நள்ளிரவில் ஒரு கும்பல் அந்த சிலையின் தலைப்பகுதியை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது.
2 பேர் கைது
இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மேல்புறம் பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ் (வயது 37), பண்டாரவிளையை சேர்ந்த பிரதீஷ் (38) என்பதும், மதுபோதையில் சத்ரபதி வீரசிவாஜியின் சிலையை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
ராணுவ வீரருக்கு...
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அஜீஸ் (32) என்ற ராணுவ வீரருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அஜீசை தீவிரமாக தேடி வருகிறார்கள்.