உடுமலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
உடுமலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
தளி
உடுமலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்கள்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் சார்பில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இணைந்து வாகனங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது அரசு விதிமுறைகள் முழுமையாக பூர்த்தி செய்யாத பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்காமல் இயங்குவதற்கு தடை விதிப்பார்கள்.
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் தொடங்க சில நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பள்ளி வாகனங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது. அதன்படி உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் செயல்பட்டு வரும் 33 தனியார் பள்ளிகளில் 266 வாகனங்களில் 156 வாகனங்கள் நேற்று கூட்டு ஆய்வுக்காக உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அந்த வாகனங்களை உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பள்ளி வாகனங்களின் படிக்கட்டுகள், தளம் மற்றும் இருக்கைகளின் உறுதித்தன்மை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ள வேக கட்டுப்பாட்டுக்கருவி, கண்காணிப்புக்கேமரா, ஜி.பி.எஸ்.கருவி போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடும் ஆய்வு செய்யப்பட்டது.
அத்துடன் விபத்து காலத்தில் உதவும் வகையில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசரவழி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளதா? கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? எனவும் ஆய்வும் மேற்கொண்டனர்.
தகுதி சான்று ரத்து
ஆய்வின் முடிவில் குறைபாடுகள் உள்ள 32 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்து இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பணிமனையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் 110 வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வின் போது விபத்துக்காலத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து உடுமலை தீயணைப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் பயிற்சி அளித்தனர். இதில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்கள் அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.