போக்குவரத்து கழகங்களில் தனியார்மயத்தை கைவிட வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்


போக்குவரத்து கழகங்களில் தனியார்மயத்தை கைவிட வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
x

போக்குவரத்து கழகங்களில் தனியார்மயத்தை கைவிட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒட்டுமொத்த தமிழ்நாடே கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அதிருப்தியில் இருக்கின்ற நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக பஸ்களில் பயணம் செய்யும் ஏழை, எளிய மக்களையும் கடும் அதிருப்திக்கு தி.மு.க. அரசு ஆளாக்கியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பஸ் போக்குவரத்தில் தனியார் அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி வந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியாளர்களை வெளிமுகமை மூலம், அதாவது தனியார் ஏஜென்சி மூலம் தி.மு.க. அரசு பணியமர்த்தியுள்ளது தொழிலாளர்கள் இடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

இதில் இருந்து தனியார்மயக்கொள்கையில் தி.மு.க. அரசு தீவிரமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. தி.மு.க. அரசு தனியார் ஏஜென்சி மூலம் ஆட்களை நியமித்தது, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு காரணம் தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை. இதன் விளைவாக பாதிக்கப்பட்டது ஏழை, எளிய, நடுத்தர மக்கள். போக்குவரத்துக் கழகங்களில் வெளிமுகமை மூலம் ஆட்கள் அமர்த்தப்படுவதை உடனடியாக கைவிட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை இனி வருங்காலங்களில் தடுத்து நிறுத்தவும், காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story