பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள தமிழக அரசின் அருங்காட்சியகத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேசினார்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. வேலூர் ஊரீசு கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் திருஇன்பஎழிலன், குண்ராணி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா, வேலூர் தனலட்சுமி தஞ்சாவூர் ஓவிய கலைக்கூடம் நிறுவனர் செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கி பேச்சுப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதில் லோட்டஸ் தொடக்கப்பள்ளி தாளாளர் பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அருங்காட்சியக தொழில்நுட்ப உதவியாளர் தமிழரசன் நன்றி கூறினார்.