அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு
சாயல்குடியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நவாஸ்கனி எம்.பி. பரிசுகளை வழங்கினார்.
சாயல்குடி,
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு குருவாடி சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று கன்னிராஜபுரம், சாயல்குடி, பெருநாழி, குருவாடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் குலாம்முகைதீன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை தலைவர் மணிமேகலை பாக்கியராஜ், முன்னாள் சாயல்குடி பேரூராட்சி சேர்மன் முகம்மது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருவாடி சேரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அன்சாரி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கினார்.ஆசிரியர் சிவாஞானம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சாயல்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் அப்துல் சத்தார் சாயல்குடி வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து சமுதாய நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.