போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு
சுரண்டையில் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன், துணைத்தலைவர் சங்கரா தேவி முருகேசன், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சுரண்டை நகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட 'என் குப்பை என் பொறுப்பு' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு குறும்படத்தை பழனிநாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார். தொடர்ந்து சுரண்டை நகராட்சி தூய்மை பணியாளர்களை பாராட்டி தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பயனற்ற கழிவு பொருட்களை கொண்டு வீட்டு உபயோக உபகரணங்கள் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பணிநியமனக்குழு தலைவர் சாந்தி தேவேந்திரன், ஒப்பந்த குழு தலைவர் பரமசிவன், நகராட்சி உறுப்பினர் ஜெயராணி வள்ளிமுருகன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.