போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
x

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 260 பேர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக தீர்வு காணுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த பெண் ஒருவருக்கு முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழையும், இலவச தையல் எந்திரமும் வழங்கினார்.

பரிசு- சான்றிதழ்

தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்க கருவியை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி சுப்பையா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story