போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று உலக தலசீமியா தினம் அனுசரிக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணைமுதல்வர் கவுரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை தலைவர் கல்பனா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
தலசீமியா தினத்தையோட்டி மருத்துவக்கல்லுாரியில் ரத்ததான முகாம், வினாடி–வினா, ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல போட்டிகளும், விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. இதையடுத்து, தலசீமியா நோயுடன் வாழும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது அனுபவங்களை பகிந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் டீன் பாப்பாத்தி பேசுகையில், அடுக்கம்பாறை மருத்துவமனையில் 23 தலசீமியா குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 11 குழந்தைகளுக்கு முறையாக ரத்தம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இரும்புசத்து உள்ளிட்ட மாத்திரைகள் அளிக்கப்படுகிறது. இதுவரை கர்ப்பிணிகளுக்கு தலசீமியா கண்டறியும் சிறப்பு ரத்த பரிசோதனை முகாம் இலவசமாக செய்யப்பட்டு 261 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டது என்றார்.
இதில் துறைத்தலைவர்கள் மோகன்காந்தி, ராஜவேலு, ரவிச்சந்திரன், டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.