பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவாரூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ பரிசு வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, நலத்திட்ட உதவிகள், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 215 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வெற்றி பெற்ற 16 பேருக்கு பரிசு
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற 16 பேருக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழினை கலெக்டர் வழங்கினார். மேலும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தின் மூலம் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானிய தொகைக்கான அனுமதி ஆணையினை ஒருவருக்கு வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) கனகலெட்சுமி, தாட்கோ மாவட்ட மேலாளர் அன்பழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா உள்ளிட்ட பல்வேறுதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.