மாநில வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களை சேர்ந்த 305 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் என 4 பிரிவுகளில் 8 உட்பிரிவுகளுடன் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நெல்லை மாவட்ட அணி முதல் இடத்தையும், சேலம் மாவட்ட அணி 2-வது இடத்தையும், வேலூர் மாவட்ட அணி 3-வது இடத்தையும் பிடித்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் பிரான்சிஸ், தென் தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் சுரேஷ், மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் சிவராமலிங்கம், துணைத்தலைவர் முத்துப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.