கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
நாகர்கோவிலில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிசு வழங்கினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிசு வழங்கினார்.
கால்பந்து போட்டி
குமரி மாவட்ட இளைஞர்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகளிடையே போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரி மாவட்ட போலீசார் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் பல்வேறு அணிகளுக்கான கால்பந்து போட்டி நடந்து வந்தது. இந்த போட்டியை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இதன் இறுதிப் போட்டி நேற்று நாகர்கோவில் குருசடியில் நடந்தது.
இறுதிப்போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ''ள்ளி- கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்கும் நோக்கிலும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் மாவட்ட காவல்துறை சார்பில் இந்த கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்கள், மாணவர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்
பின்னர் நடந்த போட்டியில் குருசடி ஜாலி பிரெண்ட்ஸ் அணி முதல் பரிசு பெற்றது. இந்த அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கபரிசும், சுழற் கோப்பையும், அணி வீரர்களுக்கு தனிநபர் பதக்கமும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை மறவன்குடியிருப்பு யூத் கிளப் அணி பெற்றது. இந்த அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், சுழற் கோப்பையும், அணி வீரர்களுக்கு தனிநபர் பதக்கமும் வழங்கப்பட்டது. 3-வது இடத்தை வட்டகரை செயின்ட ஜோசப் அணி பெற்றது. இந்த அணிக்கு சுழற்கோப்பையும், அணி வீரர்களுக்கு தனிநபர் பதக்கமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன், நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன் குமார், மாவட்ட அரசு வக்கீல் லீனஸ்ராஜ், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண், பொன்ஜெஸ்லி சிறப்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பொன்ஜெஸ்வின்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.