வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல்; 5 மாவட்ட விவசாயிகள் கவலை
தென்மேற்கு பருவமழை கைக்கொடுக்காததால் வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கைக்கொடுக்காததால் வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.
வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த 3 ஆண்டுகளில் வைகை அணையில் போதுமான அளவு நீர்இருப்பு இருந்த காரணத்தால் ஜூன் 2-ந்தேதியே அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
மழை பெய்யவில்லை
ஆனால் நடப்பாண்டில் வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. அதேபோல் ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதுடன், அணையின் நீர்மட்டம் உயரவே இல்லை. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 49 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை ஓரளவு கைக்கொடுத்தால் மட்டுமே முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரிதும் எதிர்பார்த்த பருவமழை இதுவரை பெய்யவே இல்லை. இதனால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. 2 அணைகளின் நீர்இருப்பும் சேர்த்து 5 டி.எம்.சி.யாக, அதாவது 5 ஆயிரம் மில்லியன் கனஅடியாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க சாத்தியம். தற்போது நீர்இருப்பு குறைவாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இனிவரும் நாட்களில் மழை கைக்கொடுத்தால் அடுத்த மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.
இதற்கிடையே வைகை அணையை நம்பியுள்ள தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களின் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலையில் உள்ளனர்.