மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க சிக்கல் தீர்க்கும் மையங்கள் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க சிக்கல் தீர்க்கும் மையங்கள் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இந்தியா - இலங்கை கடற்கரை பகுதிகளில் சிக்கல் தீர்க்கும் மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.

உதாரணமாக, கடந்த மாதம் ஆகஸ்டு 6-ந்தேதி தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து சென்ற 10 மீனவர்களும், ராமேசுவரத்திலிருந்து சென்ற 6 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 95 படகுகள் இலங்கை வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிக்கல் தீர்க்கும் மையங்கள்

எனவே, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரிக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரியும், தமிழக மீனவர்கள் மீதான தொடர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரியும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கும், ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.


Next Story