வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளருமான வி.சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், அனைத்துத் துறை பணிகளின் முன்னேற்றங்களை கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். கடந்த மாதம் அளித்த முன்னேற்ற பணிகள் விவரம் மற்றும் தற்போது ஒரு மாதகாலத்தில் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகளின் முன்னேற்றங்களை கேட்டு அறிந்தார். மேலும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், நிலுவை பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளின் நிலுவை, முன்னேற்றங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
தெரிவிக்க வேண்டும்
பணிகளை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள், காலதாமதங்கள் குறித்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும் கடந்த 2 மாதமாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் துறைகள் வாரியாக செயல்படுத்தும் திட்டங்களில் காலதாமதங்கள், பிரச்சினைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்ட அறிக்கைகளில் தொய்வுகள் இருக்கக் கூடாது. அதில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
அலுவலர்கள் அனுப்பும் அறிக்கைகளும், துறை தலைவர்கள், செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்படும் அறிக்கைகளும், எனக்கு சமர்ப்பிக்கும் அறிக்கைகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.