ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மக்கள் பிரச்சினைகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து, அதை சரிசெய்வதாக வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பார்கள்.

ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் மாறிக்கொண்டே இருந்த போதிலும் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

மாடுகள் தொல்லை

இது தொடர்பாக சட்டமன்ற தொகுதிகளில் உடனடியாக முன்னுரிமை கொடுத்து தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளும், பலதரப்பட்ட மக்களின் கருத்துகளையும் காண்போம்.

ராணிப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி.பாலாஜி:- ராணிப்பேட்டைராணிப்பேட்டையில் நவல்பூர், காரை கூட்ரோடு பகுதியில், எம்.பி.டி. சாலை எனப்படும் சென்னை -சித்தூர் சாலையில் கட்டப்பட்ட வரும் ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும். தற்போது போக்குவரத்து ராணிப்பேட்டை நகருக்குள் 3 மிகப்பெரிய பள்ளிகள் இருக்கும் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

நகருக்குள் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே மாடுகள், போக்குவரத்து நிறைந்த சாலையில் சுதந்திரமாக சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி வரும் அனைத்து பஸ்களும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் வேலூரில் இருந்து ஆற்காடு வழியாக சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும், ராணிப்பேட்டைக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா செல்லும் எம்.பி.டி. சாலை எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

'ரோப்கார்' பக்தர்கள் பயன்பாட்டுக்கு எப்போது?

சோளிங்கரை சேர்ந்த சமூக ஆர்வலர் டி. கோபால்:-ராணிப்பேட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் சோளிங்கர் அமைந்துள்ளதால் நான்கு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனை வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனை மல்டி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையாக மாற்ற வேண்டும். மருத்துவமனையில் மிகவும் சேதம் அடைந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தை உடனடியாக அகற்றி புதிய கட்டிடம் அமைக்க வேண்டும், சோளிங்கர் பேருந்து நிலையத்தை விரிவாக்க செய்ய வேண்டும், கருமாரியம்மன் கோவில், பேருந்து நிலையம், அண்ணா சிலை, தக்கான்குளம், பாட்டி குளம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் அமைக்க வேண்டும். பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் அமைக்க வேண்டும், சோளிங்கர் அனைத்து தெருக்களிலும் போக்குவரத்துக்கு ஏதுவாக ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், மழை காலங்களில் மழைநீர் வெளியேற வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும், சோளிங்கர் தொகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர் பற்றாக்குறைகளை நிரப்ப வேண்டும். சோளிங்கர் பஜார் பகுதியில் அமைந்துள்ள 50 ஆண்டு பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும். முக்கியமாக மலைகோவிலுக்கு செல்லும் 'ரோப்கார்' திட்ட பணிகளை விரைவாக முடித்து பக்தர்கள் வசதிகளை செய்துதர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story