திருப்பத்தூர் மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள்


திருப்பத்தூர் மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்மாவட்டத்தில் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மக்கள் பிரச்சினைகள்

திருப்பத்தூர்மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து, அதை சரிசெய்வதாக வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பார்கள்.

ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் மாறிக்கொண்டே இருந்த போதிலும் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இது தொடர்பாக சட்டமன்ற தொகுதிகளில் உடனடியாக முன்னுரிமை கொடுத்து தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளும், பலதரப்பட்ட மக்களின் கருத்துகளையும் காண்போம்.

மாவட்ட தலைமை மருத்துவமனை

திருப்பத்தூரை சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி தாமோதரன்:- திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தற்போது நிலவி வரும் போக்குவரத்தை சரி செய்ய தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து சேலம் ரோடு வரையும் மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி கூட்ரோடு வரை மேம்பாலம் அமைத்து தரவேண்டும். திருப்பத்தூர் தொகுதியில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளார்கள் அவர்களுக்காக விவசாயம் சார்ந்த தொழிற்சாலை மற்றும் குளிர்சாதனக் கிடங்கு அமைத்து தர வேண்டும். மேலும் திருப்பத்தூர் பகுதியில் மகளிர் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லை. உடனடியாக அரசு அல்லது தனியார் தொழிற்சாலைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் நகர பகுதியை பொறுத்தவரை அனைத்து சாலைகளையும் தார் சாலைகளாக மாற்ற வேண்டும். பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும், வருங்காலத்தை கருத்தில் கொண்டு தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலை அருகே புதிய பஸ் நிலையம் கொண்டு வர வேண்டும். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தர முயற்சி எடுத்து கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மைப்படுத்தி படகு சவாரி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பூரைச் சேர்ந்த எம்.பிரபாகரன்:- ஆம்பூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பெற்று வருகிறது. இதனால் சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு உள்ளது. மேலும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் குண்டும் குழியுமான சாலைகளில் வாகன ஓட்டிகள் சென்று வருவதால் பொதுமக்களுக்கு முதுகு வலி மற்றும் சாலைகளில் விழுந்து கை கால் முறிவு ஏற்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும்.

ரெயில்வே பாலம்

ரெட்டி தோப்பு பகுதியில் மழைக்காலங்களில் ரெயில்வே பாலத்தின் வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பள்ளிக்கு, வேலைக்கு ஆம்பூருக்கு செல்பவர்கள் இந்த வழியாக தான் செல்ல வேண்டும். உடனடியாக ரெட்டி தோப்பு ரெயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் இல்லை. அலுவலகம் இருந்தால் மக்கள் தங்கள் குறைகளை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று எம்.எல்.ஏ. வை சந்தித்து தங்கள் குறைகளை கூறுவார்கள். காவேரி கூட்டு குடிநீர் திட்டம் வெங்கடசமுத்திரம், கரும்பூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கிடையாது. இதனால் குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த எஸ்.விஜயரங்கன்:- நாட்டறம்பள்ளி தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் மகளிர் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வெளியூர் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோலார்பேட்டை மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான ஜங்ஷன் பஸ் நிலையம் வரை இருபுறமும் கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும். வாரச்சந்தை செயல்படும் இடத்தில் போதுமான இடம் இல்லாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சந்தைக்கு தேவையான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வழியாக சென்னை-திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்கள் நின்று செல்வது இல்லை. அவை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வழி இல்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டாலோ, பிரவச வலியில் துடித்தாலோ சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே, 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை ஏற்படுத்தி தர வேண்டும். பெத்தகல்லுப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இருபுறமும் சர்வீஸ் சாலையில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மண் சாலையாக மாறியுள்ளது இதனால் இருபுறமும் தார் சாலை அமைத்து தர வேண்டும்.

தனி தாலுகா

வாணியம்பாடி எஸ். மகேந்திரன்:- வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியையும், ஆண்டியப்பனூர் அணைப்பகுதியையும் முறையாக முழுமையாக பராமரித்து அனைத்து அடிப்படை வசதிகளை செய்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்குதர வேண்டும். ஆலங்காயம் பகுதியை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகாவை உருவாக்க வேண்டும். இதே போல் தெக்குப்பட்டு பகுதியில் மூடப்பட்ட சந்தன எண்ணெய் தொழிற்சாலையில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் வனத்துறை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, சந்தன தொழிற்சாலை நடைபெற்று வந்த இடத்தில் மாற்று ஒரு தொழிற்சாலையை அமைத்திட வேண்டும். வாணியம்பாடி பைபாஸ் சாலையில் கட்டப்பட்ட கூடுதல் பஸ் நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் திறந்து வைக்க வேண்டும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாலாற்று பகுதியில் தமிழக பகுதிகளில் தடுப்பணைகளை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை வாணியம்பாடி நகரப் பகுதியில் அமைத்து நீதிமன்றம் செயல்பட தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும், அப்போதுதான் மக்களின் நீண்ட கால பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியும்.

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எம்.செல்வ கணேசன்:- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதியில் மேம்பாலம் இல்லாததால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அவை ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக ஆங்காங்கே எடுக்கப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

ஆரணியில் இருந்து ஆற்காடு வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மற்ற வாகனங்கள் புறவழிச் சாலை இல்லாததால் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உடனடியாக புறவழிச் சாலை அமைக்க வேண்டும். ஆற்காடு நகரில் பிணங்களை எரிக்க எரிமேடை கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்காடு நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தூர்வாடப்படாமல் மண் தேங்கி இருப்பதால் கழிவு நீர் செல்ல தடையாக உள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. எனவே தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story