மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான நடைமுறைகள்
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக நடைமுறைகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக நடைமுறைகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
2 கட்டங்களாக பதிவு பணி
வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 699 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 934 குடும்ப அட்டைகள் உள்ளது.
முதல்கட்டமாக 418 கடைகளில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 955 குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பங்கள் வருகிற 24-ந் தேதி பதிவு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த பணி ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முடிவடையும். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 397 முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
2-ம் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி 281 கடைகளில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்து 987 குடும்ப அட்டைகளுக்கு மேற்கொள்ளப்படும். ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கப்பட்டு 16-ந் தேதி பணிகள் முடிவடைய உள்ளது. 2-ம் கட்டமாக நடைபெறும் பணிக்காக 263 முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.
டோக்கள் வினியோகம்
ரேஷன்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வீடுகளுக்கே சென்று விண்ணப்பங்கள் வழங்குவார்கள். அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் மட்டுமே விண்ணப்பங்களை விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு கொண்டு வரவேண்டும்.
கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொருவருக்கும் நாள், நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்படும்.
விண்ணப்பபதிவு செய்வதற்காக குடும்ப அட்டையில் உள்ள பெண் உறுப்பினர்களில் ஒருவரை அந்தந்த குடும்பத்தினரே நியமனம் செய்ய வேண்டும். எந்தெந்த நாட்களில் தெருக்களில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்ற விவரத்தை ஒரு தகவல் பலகையாக கடைகள் முன்பு அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும். பதிவு முகாம் காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் அனைத்து நாட்களிலும் நடத்தப்படும்.
கடும் நடவடிக்கை
இதுதொடர்பாக சந்தேகம் மற்றும் புகார்கள் இருந்தால் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
பெண் உறுப்பினரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்சார வாரிய கட்டண ரசீது ஆகியவற்றினை அசலாக கொண்டு செல்ல வேண்டும். நகல் ஏற்றுக்கொள்ளப்படாது.
டோக்கனில் குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய இயலாதவர்கள் கடைசி 2 நாட்களில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம். தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பத்தினை நகல் எடுத்து அதை பூர்த்தி செய்து அதை முகாம்களுக்கு கொண்டுவரக்கூடாது.
இந்த வழிமுறைகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.