காருக்குறிச்சி அருணாசலத்திற்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை-சபாநாயகர் அப்பாவு பேச்சு


காருக்குறிச்சி அருணாசலத்திற்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை-சபாநாயகர் அப்பாவு பேச்சு
x

நாதஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலத்திற்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

திருநெல்வேலி

நாதஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலத்திற்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

நாட்டுப்புற இசைக்கலை பெருவிழா

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், நெல்லை மண்டல கலை பண்பாட்டு துறை, தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பில், நாட்டுப்புற இசைக்கலை பெருவிழா மாநாடு நெல்லையில் நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, மலேசியாவை சேர்ந்த இருதயம் ஜெபஸ்டியான் அந்தோணி உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காருக்குறிச்சி அருணாசலம்

தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சியில் கோவில் கொடை விழாக்களில் இரவு 10 மணி வரை மட்டுமே நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை விடிய விடிய நடத்த அனுமதி வழங்கப்படுவதோடு கலைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தமிழர் நாகரிகம், தமிழ் மொழி தொன்மையானது என்பது அகழாய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கெல்லாம் தொன்மையானது இசையாகும். இசையை வளர்க்கும் கலைஞர்களை போற்ற இந்த அரசு தயாராகவுள்ளது. நாதஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலத்திற்கு மணிமண்டபம் அமைக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலவாரியம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பேசுகையில், ''மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சங்கீத நாடக அகாடமி என இருந்ததை 1973-ம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என மாற்றி அமைத்தார். மன்றம் தொடங்கிய பொன் விழா ஆண்டை கொண்டாட முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். நாட்டுப்புற கலைஞர்களை பாதுகாக்கும் பொருட்டு தி.மு.க. ஆட்சியில் நலவாரியம் அமைக்கப்பட்டது.

நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பென்ஷன் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தியதோடு, சங்க வளர்ச்சிக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கினார். கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு பொற்கிளி வழங்கி அரசு கவுரவிக்கிறது. தமிழகத்தில் 6 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் இருந்த போதிலும் 50 ஆயிரம் பேர் மட்டுமே நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளனர். வாரியத்தில் உறுப்பினர்களை அதிகரிக்க மார்ச் மாதம் மாவட்ட ஆய்வு குழு அமைத்து, அவர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு ஆன்லைனில் அடையாள அட்டை மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கலைநிகழ்ச்சிகள்

விழாவுக்கு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மதுரை சோமசுந்தரம், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்க தலைவர் சத்தியராஜ் முன்னிலை வகித்தனர். தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற நிறுவன தலைவர் வளப்பக்குடி கவிஞர் வீரசங்கர் வரவேற்றார்.விழாவில் கரகம் துர்கா, செந்தில் கணேஷ், ராஜலட்சுமி உட்பட பல்வேறு நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் வில்லிசை கரகாட்டம் ஒயிலாட்டம், காவடியாட்டம், நையாண்டி மேளம், மகுடம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன், ராஜா எம்.எல்.ஏ., தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற மதிப்புறு தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் தேவர்குளம் மாரியப்பன், செயலாளர் கல்லூர் மாரியப்பன், பொருளாளர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற பொதுச்செயலாளர் கருங்குயில் கணேஷ் நன்றி கூறினார்.


Next Story