அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஊர்வலம் தொடங்கி திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பிரபு கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாதுரை ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
அரசு துறைகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை, நில அளவர் அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாவட்ட செயலாளர் சையத் ஜலால், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளர் மிருணாளினி நன்றி கூறினார்.